விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில் மனுதாரருக்கு எதிரான கருத்துகளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்து கூறப்பட்டதாக கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விஜயை ‘ஜோசப் விஜய்’ என ஹெச்.ராஜா மத ரீதியாக விமர்சித்தார்.
இந்நிலையில், மெர்சல் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற்று, அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, மெர்சல் படத்தில் என்ன தவறு கண்டீர்கள்?. இப்படத்தில் இடம்பெற்ற வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற விவகாரங்களுக்கு எல்லாம் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்?
நாட்டின் மீது அக்கறை இருந்தால், குடிப்பது, புகைபிடிப்பது, டாஸ்மாக் மற்றும் பெண்கள் பிரச்சனை குறித்து பொது நல வழக்கு தொடருங்கள். அல்லது மாற்றுத் திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவது பற்றி வழக்கு தொடருங்கள்
ஏன் மெர்சல் படத்தை மட்டும் குறி வைக்கிறீர்கள்? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். மெர்சல் படம் மட்டும்தன். நிஜ வாழ்க்கை அல்ல. கருத்து சொல்ல அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், மெர்சலுக்கு எதிரான மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.