தாம்பரத்தில் புதையல் மறைத்து வைத்திருப்பதாக சொன்ன தொழிலாளியை மர்ம கும்பல் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே உள்ள செய்யாறு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் முருகன். கூலி தொழிலாளியான இவர் சில வருடங்களாக தாம்பரத்தில் தனது குடும்பத்தோடு தங்கியபடி கட்டுமான பணிகளில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள ஒரு மது விடுதிக்கு தன் நண்பரோடு சென்ற முருகன் மது அருந்தியிருக்கிறார். தனது நண்பருக்கும் மது வாங்கி கொடுத்து விட்டு அவர்களுக்கு மது மற்றும் உணவு சப்ளை செய்த சப்ளையருக்கு ஏகப்பட்ட பணம் டிப்ஸ் கொடுத்திருக்கிறார். ஏது இவ்வளவு பணம் என நண்பர் கேட்டதற்கு, தனக்கு புதையல் ஒன்று கிடைத்திருப்பதாக கூறியிருக்கிறார். இதை அங்கு மது அருந்த வந்த வேறு ஒரு கும்பல் காதில் வாங்கியிருக்கிறார்கள்.
அதை தொடர்ந்து 10 பேராக முருகனை பின் தொடர்ந்த கும்பல் அவரது வீட்டை கண்டு பிடித்திருக்கிறார்கள். சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்த கும்பல் முருகனை தாக்கி புதையல் இருக்கும் இடத்தை சொல்ல சொல்லியிருக்கிறார்கள். முருகன் எதுவும் சொல்லாததால் ஆத்திரமடைந்து அவர்கள் முருகனை கடத்தி சென்று மூர்க்கமாக தாக்கியிருக்கிறார்கள். இதில் முருகன் இறந்திருக்கிறார்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என அந்த கும்பல் முருகனின் மனைவியையும், மகனையும் மிரட்டி விட்டு தப்பி விட்டிருக்கிறார்கள். அவர்கள் மிரட்டலுக்கு பயந்து தன் கணவர் பாம்பு கடித்து இறந்து விட்டதாக பொய் சொல்லி உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றிருக்கிறார் முருகனின் மனைவி. ஆனால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் முருகனின் மனைவியிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
விசாரணையில் மேற்சொன்ன சம்பவங்கள் தெரிய வந்த நிலையில் முருகனை அடித்து கொன்ற கும்பல் குறித்து தாம்பரம் போலீஸுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து முருகனை கொன்ற கும்பலை சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.