தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாள் மட்டுமே வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் இருக்கும் நிலையில் இன்னும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியாகாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் தமிழகத்தின் ஏழு தொகுதிகளுக்கும் புதுவைக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்னும் இரண்டு தொகுதிகளுக்கு அதாவது திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பதும் அதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தேர்தலுக்கும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அளித்த பேட்டியில் இன்று மாலைக்குள் இரண்டு மக்களவைத் தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.