இன்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாநாடு நடத்தும் நிலையில் அதற்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வமும் மாநாடு நடத்த உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவு கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் தனக்குள்ள செல்வாக்கை காட்டும் விதமாக பிரம்மாண்டமான அதிமுக கட்சி மாநாட்டை இன்று எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடத்துகிறார்.
அதனால் மேற்கு மாவட்டங்களில் தனக்குள்ள செல்வாக்கை காட்டும் விதமாக ஒரு மாநாட்டை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் ஓபிஎஸ் விரைவில் இதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.