மாற்றுத்திறனாளிகளை (காதுகேளாதோர்) புண்படுத்தும் வகையில், கேலி செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட Rohan Cariappa மற்றும் Shaayan Bhattacharya ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு காது கேளாதோர் வாய்பேசாதோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
வீடியோவில் சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பொழுதுபோக்கு என்ற போர்வையில் புண்படுத்தும் சைகைகளை செய்வதாகவும் தகாத மொழியை பயன்படுத்துவதாகவும் அந்த செயல் காது கேளாதோர் சமூகத்தை மிகவும் அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த வீடியோ, ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவு ஆகியவற்றை மீறி உள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.