தஞ்சை அருகே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி ஒருவர் அந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சை அருகே உள்ள மகளிர் கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவர் திருமணமாகாத நிலையில் கர்ப்பமடைந்ததால் தான் கர்ப்பம் அடைந்ததை வீட்டிற்கும் கல்லூரிக்கும் தெரியாமல் வேறு வேறு காரணங்களை சொல்லி மறைத்துள்ளார்.
இந்த நிலையில் வகுப்பறையில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் கழிப்பறைக்குச் சென்று பெண் குழந்தையை பெற்றுள்ளார். youtube வீடியோவை பார்த்து தொப்புள் கொடியை அறுத்து அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் கல்லூரி அருகே உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு குப்பைகளை அதன் மேல் மூடி மறைத்துவிட்டு மீண்டும் வகுப்பறைக்கு வந்து அமர்ந்து உள்ளார்.
ஆனால் அவருக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டிருப்பதை பார்த்த மாணவிகள் அவரிடம் கேட்டபோது மாதவிடாய் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறி சமாளித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்த போது அவருக்கு குழந்தை பிறந்திருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அவர் குப்பைத் தொட்டியில் இருந்து வீசிய குழந்தையை மீட்டு உயிருக்கு போராடிய அந்த குழந்தையை மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.