கோவையில் காவல் நிலையம் ஒன்றை காட்டுயானை ஒன்று நள்ளிரவில் வந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் – சிறுவாணி சாலையில் ஆலாந்துறை அருகே காருண்யா காவல்நிலையம் செயல்பட்டு வருகின்றது. காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் அனைவரும் நேற்று இரவு ரோந்து பணிக்காக வெளியே சென்றுவிட்ட நிலையில் ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் இருந்துள்ளார்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் காவல்நிலையத்தை முகப்பு கேட்டை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டு பெண் போலீஸ் வெளியே வந்து பார்த்துள்ளார். அங்கே ஒற்றை காட்டுயானை கேட்டை உடைத்துக் கொண்டிருந்துள்ளது. உடனே பெண் காவலர் காவல் நிலையத்திற்குள் சென்று பூட்டிக் கொண்டதுடன், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
சிலமணி நேரங்களில் காவல் நிலையம் விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர முயற்சிக்கு பின் யானையை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.