பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை காலங்களும் மழை காலமும் நெருங்கியுள்ளன.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்து நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதாவது தற்போது மழை, குளிர்காலம் என்பதால் கொரோனா அதிகம் பரவக்கூடும் என அச்சப்படுவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி திறப்பு ஜனவரி மாதம் இருக்க கூடும் என தெரிகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.