ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் ரூ.26.81 கோடி செலவில் 7,040 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே. 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
2024-ஆம் ஆண்டு. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,7.040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.