சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
இந்த கூட்டம், இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் பாதுகாக்க உருவான ஒன்று. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள்தொகையை கட்டுப்படுத்த சமூகநல திட்டங்களை செயல்படுத்திய மாநிலங்கள், அதன் விளைவாக நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும் நிலை உருவாகும். இது வெறும் தொகுதிகள் குறைவதற்கான பிரச்சனை அல்ல, நமது உரிமைகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு 8 முதல் 12 தொகுதிகள் இழக்கும் அபாயம் உள்ளதாக கணிக்கப்படுகிறது. தொகுதிகள் குறையும்போது நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல்கள் உருவாகும். இது நம்மை நம்முடைய சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக மாற்றும். இதன் பேராபத்தை உணர்ந்த அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எந்நிலையில் இருந்தாலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுத்து வழங்கினார்.