முதல்வர் பழனிச்சாமி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை: நீக்கப்படுகிறாரா விஜயபாஸ்கர்?
முதல்வர் பழனிச்சாமி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை: நீக்கப்படுகிறாரா விஜயபாஸ்கர்?
தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக எப்பொழுது என்ன நடக்கும் என்கிற ஒருவித பரபரப்புடனே நகர்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னர் தான் இந்த நிலை உருவாகியுள்ளது.
கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முதல்வர் பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் பலரும் ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணம் சிக்கியது. இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விஜயபாஸ்கர் வாய் திறந்தால் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் என்பதால் அவர்கள் பதற்றமாகவே இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி கலைய இருப்பதாகவும், அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள் எனவும் தகவல்கள் நேற்று முன்தினம் இரவு பரவியது.
இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தை திமுக ஆளுநரிடமும் கொண்டு சென்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருடன் தீவிர ஆலோசனை ஈடுபட்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.