Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

MK Stalin

Senthil Velan

, சனி, 29 ஜூன் 2024 (14:19 IST)
கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், சேலம் ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றினார். அப்போது 100 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
 
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
 
கோவை - பொள்ளாச்சி, திருப்பூர் - நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
 
ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
 
கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்றும் தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
 
ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும் என்றும் சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
 
அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

ரூ. 4.64 கோடியில் மெரினா கடற்கரை கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்
ரூ.1 கோடியில் சென்னை பெருநகர காவலில் "பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள்" அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். போதைப் பொருட்களை கண்டறியவும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கவும் ரூ. 53 இலட்சத்தில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 
இணையதள குற்றம், பொருளாதார குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் கூறினார்.

சென்னை - பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்' எனும் தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ. 2.01 கோடி செலவில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் இரண்டு அலகுகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
ரூ. 11.25 கோடியில் 1500 தற்காப்பு உடைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். ரூ 1.91 கோடி செலவில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் உருவாக்கப்படும் என்றும் ரூ. 3.86 கோடி செலவில் புதிதாக 17 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!