Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயத்தின் பிடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! துணிவில்லாத திமுக - காங்கிரஸ் கூட்டணி..! எல்.முருகன் சாடல்...

L Murugan

Senthil Velan

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (17:32 IST)
கச்சத்தீவு பிரச்சினையில் காங்கிரஸ் திமுகவின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது என்றும் பாஜக வெளியிட்ட ஆதாரங்களால் பயத்தின் பிடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மீனவ மக்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்து போயுள்ள திமுக கூட்டணி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
 
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களின் நயவஞ்சக நாடகம் அம்பலமாகியுள்ளதால் காங்கிரஸ்- திமுகவினர் அரண்டுபோயுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எழுப்பிவரும் அடுக்கடுக்கான கேள்விகளால் செய்வதறியாமல் திகைத்துபோயுள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ள பதிலிலேயே அவரது பயம் தெரிகிறது.

கச்சத்தீவு என்ற வார்த்தையை கூறவே அச்சப்படும் ஸ்டாலினுக்கு பாஜகவை பார்த்து கேள்வி எழுப்ப என்ன தகுதி இருக்கிறது. கச்சத்தீவு தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்திய நாடகத்துக்கு பதில் கூற வழி தெரியாமல் தமிழகத்துக்கு மத்திய அரசு செய்தது என்ன என பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு செய்துள்ள திட்டங்கள் எண்ணிலடங்காதவை. மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு ஆட்சியில் தமிழகத்துக்கு முக்கிய திட்டங்களுக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டை விடவும் 10 மடங்கு நிதி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்களை எல்லாம் நானும் மற்ற பாஜக தலைவர்களும் பலமுறை பட்டியலிட்டு விட்டோம். ஆனால், நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா?
 
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது கச்சத்தீவு பகுதி. 1605-ம் ஆண்டு ஆவணம் முதல் 1972ம் ஆண்டு வரையிலான அனைத்து பதிவேடுகளிலும் அப்பகுதி நமது பாரத தேசத்தின் ஓர் அங்கம் என்பது உறுதியாகியுள்ளது. நாடு விடுதலை அடைந்து 1948-ல் ராயத்வாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகு பதிப்பிக்கப்பட்ட நில ஆவணங்களின்படி மெட்ராஸ் மாகாணம் சர்வே எண். 1250ல் கச்சத் தீவு இடம்பெற்றுள்ளது.
 
இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி ஓர் மாநில எல்லையை மாற்றி அமைக்க கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி சட்டம் இயற்ற வேண்டும். ஆனால் இதை எதையும் மதிக்காமல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும் தமிழகத்தில் பதவியில் இருந்த மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் தங்கள் சொந்த நலனுக்காக கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டன.   

1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதுபெரும் பாஜக தலைவரும், பின்னாளில் பாரத பிரதமராக பதவி வகித்தவருமான வாஜ்பாய், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு இந்தியாவிற்கு துரோகம் இழைத்துள்ளதை தகுந்த ஆதாரத்தை சுட்டி காட்டி பேசியுள்ளார். மீனவர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நாடகம் நடத்துகிறார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
 
கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் தாரை வார்த்து விட்டது காங்கிரஸ் - திமுக கபட கூட்டணி. 1976-ம் ஆண்டு செய்த மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் உரிமைகள் பலி கொடுத்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
 
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கும் மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கும் அதிக நேர மீன்பிடித்தல் காலத்தில் சற்று இளைப்பாற உகந்த மீன்வளம் மிக்க பகுதியாக இருந்தது. கடலில் இத்தகைய பெரும் வெளி 283 ஏக்கர் கிடைப்பது மிக அரிது. அவ்வகையில் பாக் நீர் இணைப்பு பகுதியில் கச்சத் தீவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
 
ஆனால், நாட்டின் நலம், மீனவர் நலன் என எதையும் கருத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் - திமுகவின் சுயநல அரசியலுக்கு கச்சத்தீவை தாரவார்த்து விட்டு இன்று பாஜவை நோக்கி குதர்க்க கேள்வி எழுப்பினால் மட்டும் இவர்களை மக்கள் நம்பி விடுவார்களா? மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளதுடன் இலங்கை அரசு கைது செய்த மீனவர்கள் உடனடியாக தமிழகத்துக்கு மீட்டு வரப்பட்டுள்ளனர்.
 
இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை காலனின் பிடியில் இருந்து மீட்டு வந்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியை சாரும். இந்த சாதனைகளை செய்தது பாஜக அரசுதான் என்பதை மறைத்து விட்டு மீனவர்களுக்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி கேட்டால் திமுகவின் தவறு மறைந்து போய் விடுமா?. மேகக் கூட்டங்களால் முழு நிலவை மறைத்து விட முடியுமா?.

கச்சத்தீவு விஷயத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி செய்துள்ள துரோகத்துக்கு முதலில் பதிலை சொல்ல தயாரா? தமிழக மீனவர் சமூகத்துக்கு யாரும் செய்ய துணியாத துரோகத்தை செய்து விட்டு பதில் சொல்ல துணிவில்லாத திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மீனவ மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோகித் அவுட்... கொண்டாடிய CSK ரசிகர் அடித்து கொலை...அதிர்ச்சி சம்பவம்