காலம் போன காலத்தில், நதிகள் இணைப்பு பற்றி பேசுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்திருந்த நாளிலிருந்தே, அதிமுக அமைச்சர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் காலா படத்தில் பாடல்கள் வெளியீடு மற்றும் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் காலா போன்ற காலாண்கள் காணாமல் போகும் என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினியால் தமிழகத்தில் ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது, வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என ரஜினியை கிண்டலடிக்கும் விதத்தில் பேசி இருந்தார்.
இந்நிலையில் காலா பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நதி நீர் இணைப்புதான் எனது வாழ்நாள் கனவு என்றும் நேரம் வரட்டும் ஆண்டவன் துணையுடன் மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நல்ல நேரம் பிறக்கும் என்றும் பேசியிருந்தார்.
இதனையடுத்து விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல பேர் புதிது புதிதாக கட்சி துவங்குகிறார்கள். அவர்களெல்லாம் இதுவரை தமிழகத்திற்கு என்ன நல்லது செய்திருக்கிறார்கள். என கேள்வி எழுப்பினார். மேலும் காலம் போன காலத்தில், நதிகளை இணைக்க வேண்டும் என்கின்றனர் என்று நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசினார்.