சென்னையில் மதுரவாயல் அருகே சாலையில் இருந்த பள்ளத்தால் தவறி விழுந்த பெண் லாரியின் கீழ் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஷோபனா. இவர் ஸோகோ என்ற தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று இவர் தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார்.
மதுரவாயலில் சாலையை கடந்தபோது அங்கு பள்ளம் இருந்ததால் நிலை தடுமாறிய ஷோபனா கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் பின்னால் மணல் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஷோபனா மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக ஷோபனாவின் தம்பி இந்த விபத்தில் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சாலையில் இருந்த பள்ளம்தான் விபத்திற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் சில மணி நேரங்களில் அங்கிருந்த பள்ளம் மணல், ஜல்லிகள் கொட்டி மூடப்பட்டுள்ளது.
ஷோபனாவின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸோகோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு “எங்கள் பொறியாளர்களில் ஒருவரான திருமதி ஷோபனா, சென்னை மதுரவாயல் அருகே குண்டும் குழியுமான சாலைகளில் ஸ்கூட்டர் சறுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவள் தன் தம்பியை பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். நமது மோசமான சாலைகளால் அவரது குடும்பத்திற்கும் ஜோஹோவிற்கும் சோகமான இழப்பு” என்று தெரிவித்துள்ளார்.