சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை தீயினால் பாதிக்கப்பட்டு அந்த கட்டிடம் முழுவதுமே சிதிலமடைந்தது. தற்போது கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டிடம் இடிக்கும் பணி முடிந்தவுடன் மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'விபத்தில் சிக்கிய கட்டிடம் தெரிந்தே விதிகளை மீறி கட்டப்படவில்லை. விதிமீறல் பற்றி எங்கள் கவனத்திற்கு வந்த போது, தீயணைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும் கட்டிடம் இடிக்கப்பட்ட பின், அதே இடத்தில், அரசு விதிமுறைகளை பின்பற்றி, புதிய சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்படும்' என்று கூறினார்
தீயினால் கருகிய குமரன் தங்க மாளிகையில் பலர் மாதந்தோறும் பணம் கட்டும் நகைச்சீட்டு போட்டுள்ளனர். அதுகுறித்து கேட்டபோது பணம் கட்டிய அனைவருக்கும் கண்டிப்பாக கடை திறந்த பின்னர் அவர்கள் கட்டிய தொகைக்கு நகை தரப்படும் என்றும் அதனால் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும் சென்னை சில்க்ஸ் நிர்வாகி ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.