சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள், மாணவர்களை துன்புறுத்தி வந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களை கேலி செய்வதும், மாணவர்களை அடித்து துன்புறுத்துவதுமாக அட்டகாசம் செய்து வந்துள்ளனர். அவ்வபோது அவர்களை கண்டித்தபோதும் அவர்கள் திருந்தாமல் இருந்துள்ளனர்.
சமீபத்தில் கழிவறை சென்ற ஆசிரியர்களை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் மாணவர்களையும், அவர்கள் பெற்றோரையும் அழைத்து பேசிய போலீஸார், பின்னர் மாணவர்கள் மூவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.