சென்னையில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி பெண்டு சூர்யாவை சப்-இன்ஸ்பெக்டர் மீனா துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அயனாவரத்தில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அவர் தடுத்தும் வண்டியை நிறுத்தாமல் சென்றதோடு இரும்பு கம்பியால் அவரது தலையில் பயங்கரமாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர். அதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி பெண்டு சூர்யா தலைமறைவானார். திருவள்ளூரில் உள்ள அக்கா வீட்டில் பெண்டு சூர்யா பதுங்கியிருப்பதை கண்டறிந்த போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் பெண்டு சூர்யாவை அழைத்து வந்தபோது நியூ ஆவடி சாலையில் திடீரென பெண்டு சூர்யா தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க சென்ற காவலர்கள் இருவரை கத்தியால் தாக்கியுள்ளார். பெண்டு சூர்யாவை பிடிக்க அயனாவரம் சப்-இன்ஸ்பெக்டர் மீனா துப்பாக்கியால் பெண்டு சூர்யா முழங்காலில் சுட்டுள்ளார்.
இதனால் காயமடைந்த பெண்டு சூர்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். சமீப காலமாக ரவுடிகளை போலீஸார் சுட்டு பிடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.