சென்னையில் சாக்லேட்டில் போதை பொருளை கலந்து புதுவிதமாக விற்று வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பலர் முறைகேடாக பல இடங்களில் இவற்றை விற்றுவரும் சம்பவங்கள் தொடர்கின்றன. அதனால் ஆபரேஷன் கஞ்சா வேட்டையை நடத்திய தமிழக போலீஸார் கடந்த சில மாதங்களில் பல கஞ்சா, குட்கா விற்பனையாளர்கள், கடத்தல்க்காரர்களை கைது செய்ததுடன், பல டன் அளவிலான போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
ஆனால் சிலர் போதை மருந்துகளை ஸ்டாம்புகளில் தடவி விற்பது போன்ற நூதன முறைகளையும் கையாண்டு வருகின்றனர். சென்னை ஜாம் பஜார் பகுதியில் அந்த மாதிரி போதை சாக்லேட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அங்குள்ள பீடா கடைகளில் சோதனை நடத்தியதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் யாதவ் என்பவர் நடத்திய பீடா கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகளை போலீஸ் பறிமுதல் செய்துள்ளதுடன், அவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த போதை சாக்லேட்டுகள் பீகாரில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டுவரப்பட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.