ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் கடுமையாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக வரும் 8ம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்சமாக வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், உள் மாவட்டங்களில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், கடலோரப்பகுதிகளில் 98.6 டிகிரி வரையிலும் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6ம் தேதி வரை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்றை வானிலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோட்டில் 106.52 டிகிரியும், சேலத்தில் 105.8 டிகிரியும், திருப்பத்தூர், தருமபுரி பகுதிகளில் 104 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது. வரும் 8ம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.