ஆண்டாண்டு காலமாக அரசர்களால் வெவ்வேறு ஊர் பெயர்களால் ஆளப்பட்டு வெள்ளைக்காரர்கள் கைகளில் சிங்கார சென்னையாக அவதரித்த தனது 380 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது சென்னை மாநகரம்.
சென்னை உருவாகி 380 ஆண்டுகாலம் ஆகிவிட்டதை கொண்டாடும் வகையில் ஆகஸ்டு 18 முதல் 25 முடிய “சென்னை வாரம்” சிறப்பிக்கப்படுகிறது. இந்திய அளவில் நான்காவது பெரிய நகரம் சென்னை. உலக அளவில் 31 வது பெரிய நகரம் சென்னை.
தமிழ்நாட்டின் உச்சாணி கொம்பில் இருக்கும் சென்னைதான் மொத்த மாநிலத்தின் மூளையாக செயல்படுகிறது. இப்படிப்பட்ட சென்னை மாநகரத்திற்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? வரலாற்றை சிறிய சுவாரஸ்யத்தோடு பார்க்கலாம்.
சென்னையின் அன்றைய பெயர் தொண்டை மண்டலம். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த அரசன் தொண்டைமான் இளம்திரையன் என வரலாற்று சுவடுகள் கூறுகின்றன. அதனாலேயே இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளையர்கள் வரும் காலத்திற்கு முன்பு வரை சென்னை மிகப்பெரிய வணிக பகுதியாக இல்லாமல் ஆன்மீக பகுதியாகதான் இருந்தது.
தேவாரத்தில் சென்னையை சுற்றியுள்ள திருவான்மியூர், திருவொற்றியூர், திருவெல்லிக்கேணி, திருமையிலை (மயிலாப்பூர்) போன்ற ஊர்களும் அதன் திருத்தலங்களும் பற்றிய குறிப்புகள் உள்ளன.
நாயக்கர்களிடமிருந்து இந்த பகுதியை வெள்ளையர்கள் வாங்கிய போது இது மீன்பிடி பகுதியாக மட்டுமே இருந்தது. வெள்ளையர்கள் காலத்தில் மதராசப்பட்டினம் மற்றும் சென்னப்பட்டினம் இரண்டுமே வெவேறு பகுதிகளாக இருந்ததாக கூறப்படுகிறது.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட இடம் மற்றும் அதை சுற்றி அமைக்கப்பட்ட வர்த்தக நகரங்கள் சேர்ந்த பகுதி மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
வெள்ளையர்களுக்கு இந்த பகுதியை விற்ற தமர்லா வெங்காடாத்ரி நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பேரால் மீத பகுதிகள் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் சென்ன கேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ள சராகம் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூற்று உண்டு.
வெள்ளையர்கள் ஒட்டு மொத்த பகுதியையும் தங்கள் வணிகத்துக்காக சொந்தம் கொண்ட பிறகு அவர்கள அதை மெட்ராஸ் என்றே அழைத்தனர். வெறும் மீன்பிடி பகுதியாக மட்டுமே இருந்த மெட்ராஸ் வணிக நகரமானது. பலநாட்டு வணிகர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் சங்கமிக்கும் பகுதியாக மாறியது.
வெள்ளையர்கள் கோட்டைகளை கட்டினர், ரயில் தளவாடங்கள் அமைத்தனர், துறைமுகங்களை ஏற்படுத்தினர். இலண்டனுக்கு நிகரான அழகிய நகரமாக சென்னை திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது. கூவத்தில் படகுகளும், சாலைகளில் ட்ராம் வண்டிகளும் மக்களை சுமந்து கொண்டு சென்றுக்கொண்டிருந்தது ஒரு காலத்தில்!
வெள்ளையர்கள் ஆட்சி முடிந்து சுதந்திரம் கிடைத்து திராவிட கட்சிகளும் ஆட்சியமைத்த பிறகுதான் மெட்ராஸ் சென்னையாக மாற்றப்பட்டது. 1996 ஜூலை 17 அன்று மெட்ராஸ் என்னும் பெயரை மாற்றி சென்னை ஆக்கியது தமிழக அரசு.
முதன்முதலில் நாயக்கர்கள் சென்னையை வெள்ளையர்களுக்கு 1639ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி விற்றனர். அதை கணக்கில் கொண்டே ஆண்டுதோறும் சென்னை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.