Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரமணன் புயல் கரையை கடக்கிறது: வானிலை ஆய்வுமைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் ஒய்வு

ரமணன் புயல் கரையை கடக்கிறது: வானிலை ஆய்வுமைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் ஒய்வு

சுரேஷ் வெங்கடாசலம்

, வியாழன், 31 மார்ச் 2016 (15:49 IST)
பள்ளிக் குழந்தைகளின் ஹீரோ என்றும், வருண பகவானின் தம்பி என்றும், மழை மன்னன் என்றும் அன்போடு அழைக்கப்பட்ட, சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் இன்று (மார்ச் 31) தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.


 

 
இது குறித்து ரமணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் என் மீது வைத்திருக்கும் அன்பை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு சிறுவயது முதல் இயற்கை மீது ஆர்வம் அதிகம் அதனால்தான் இந்த துறையை தேர்ந்தெடுத்து பணிக்கு வந்தேன்.
 
நான் பணியில் சேர்ந்தபோது இந்த துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் அந்த அளவுக்கு இல்லை. தற்போது செயற்கைகோள், ரேடார், துருவ வட்டங்கள் போன்றவற்றில் இருந்து அனுப்பப்படும் படங்கள் துல்லியமாக உள்ளன.
 
மேலும் கணினி சார்ந்த கணிப்புகளும் மேம்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே வானிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்" என்று கூறினார்.
 
இதற்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு எத்தனையோ இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர். ஆனால் தற்போது ஓய்வு பெறும் ரமணினைப்போல அவர்கள் அத்தனை பிரபலமடையவில்லை.
 
மழை காலங்களில் ரமணனால் அறிவிக்கப்படும், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், இவர் பள்ளி குழந்தைகளின் மனதில் நீங்காத இடம் பிடத்தார்.
 
"ரமணன் அங்கிள் இன்னைக்கு மழை வருமா?" என்று பள்ளிக்குக் கிளம்பிய நிலையில் தயாராக இருக்கும் குழந்தைகள் விடுமுறை வேண்டி கேட்பதைப் போன்று சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படமும் வாசகமும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
 
ரமணன் அவர்களின் உச்சரிப்பு முறை அனைவரையும் கவந்ததாகவும், மனதில் நீங்காத இடம் பிடிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

மொத்தத்தில் ரமணன் அனைவரின் அன்பையும் பெற்று இன்று ஓய்வு பெறுகிறார். வானிலை ஆய்வு மையத்திற்கு இனி எத்துனை இயக்குநர்கள் வந்தாலும், ரமணன் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரமணன் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் படிப்பை முடித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி முடித்தவர்.
 
இந்நிலையில், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
 
இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய வானூர்தி வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டே பதவி உயர்வுக்கான பல தேர்வுகளையும், சென்னை பல்கலைகழகத்தில் பி.எச்டி ஆய்வு பட்டத்தையும் படித்து முனைவர் பட்டம் பெற்றார்.
 
2002 ஆம் ஆண்டு முதல் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றிய ரமணன் இன்று பணி ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil