Publish Date: Sat, 02 May 2020 (11:34 IST)
Updated Date: Sat, 02 May 2020 (12:57 IST)
சென்னை மாவட்டத்தில் கொரோனா அறிகுறியே இல்லாமல் பலருக்கு பரவுவதாக மக்கள் பீதியில் உள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 203 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 641 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில், 558 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 87%.
இந்நிலையில், சென்னையில் குறிப்பாக கடந்த 5 நாட்களில் ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து தொற்று ஏற்படாமல் புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.