சென்னை விமான நிலைய வளாகத்தில் இளம்பெண் ஒருவர் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்தில் மேற்பார்வை அதிகாரியாக பணிபுரியும் மோகனன் என்பவர் தனது மனைவி பெயரில் கார்கோ ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் லாபம் பெற்று வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரியும் டிம்பிள் என்ற இளம்பெண் தனது காதலருக்கு ஏர் இந்தியாவில் வேலை வேண்டும் என மோகனனை அணுகியுள்ளார். அவரும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 20 லட்சம் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி டிம்பிளின் நண்பர்கள் சிலரும் டிம்பிள் மற்றும் மோகனனை நம்பி லட்சக்கணக்கில் வேலைக்காக பணம் கொடுத்துள்ளனர். இதனால் ஒரு சில மாதங்களில் மோகனன் கோடிக்கணக்கான ரூபாயை வேலை வாங்கி தருவதாக கூறி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் அவர் இழுத்தடித்துள்ளதால் பணம் கொடுத்தவர்கள் டிம்பிளை நெருக்க ஆரம்பித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டிம்பிள் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது தாயார் தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் மோகனனிடம் போலீசார் விசாரணை செய்தபோது டிம்பிள் தன்னிடம் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்றும் வேறு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாந்து விட்டு தன்னிடம் கொடுத்ததாக கூறுவதாகவும் கூறுகிறார். பணம் கொடுத்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதால் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் டிம்பிள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது