கோடை கால மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளிலும் மாம்பழ சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ளது. மக்கள் பலரும் மாம்பழங்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மாம்பழத்தை செயற்கையாக பழுக்க வைக்க ரசாயனங்களை சிலர் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இவ்வாறான ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து அவர்கள் மார்க்கெட்டில் சோதனை நடத்தினர். அதில் சுமார் 7 டன் அளவிலான செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றை அப்புறப்படுத்திய அதிகாரிகள் இதுபோன்ற செயற்கை மாம்பழங்களை விற்றால் அடுத்த முறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக 20 கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.