ஆன்லைன் மோசடியில் முதலிடம் - சென்னையில் ஒரே ஆண்டில் ரூ.16 கோடி சுருட்டல்
, வெள்ளி, 16 ஜூன் 2017 (12:56 IST)
இந்தியாவில், ஆன்லைன் மோசடியில் சென்னை முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
தொழில் நுட்பம் வளர வளர அதில் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விபரங்களை திருடி அதன் மூலம் பணத்தை சுருட்டுவது ஆன்லைனில் அதிகரித்து வரும் குற்றமாக இருக்கிறது.
இதில் முக்கிய விவகாரம் என்னவெனில், இந்தியாவில் சென்னையில்தான் இந்த குற்றம் அதிகமாக நடக்கிறது. இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு நாள்தோறும் ஏராளமான புகார்கள் வருகிறது.
சமீபத்தில், வங்கி மற்றும் ஆன்லைன் மோசடிகளை தடுப்பது பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை வேப்பேரியில் நடந்த இந்த கூட்டத்தில் தனியார் வங்கிகளை சேர்ந்த பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் பேசிய ஆணையர் விஸ்வநாதன், க்ரைம் போலீசாருக்கு வரும் மோசடி புகார்களின் 70 சதவீதம் ஆன்லைன் மோசடி மற்றும் வங்கிகள் தொடர்பானவைதான் எனக் கூறினார். மேலும், இந்த மோசடியில் சென்னை முதலிடம் வகிப்பதாகவும், ஒரே ஆண்டில் ரூ.16 கோடி மோசடி நடந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, அறிமுகமில்லாத செல்போன் எண்களிலிருந்து தொடர்பு கொண்டு வங்கி மற்றும் டெபிட், கிரெடி கார்டு குறித்த விபரங்கள் மற்றும் ஓ டி பி எனப்படும் பாஸ்வேர்ட் குறித்து தகவல் கேட்டால் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அடுத்த கட்டுரையில்