சென்னையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட கழிவுகளை அகற்றுவதற்கு 19,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட போவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று மிகச் சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதனால் சென்னையில் டன் கணக்கில் பட்டாசு கழிவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அனைத்து பட்டாசு கழிவுகளையும் அகற்ற ஒரு மண்டலத்திற்கு இரண்டு வாகனங்கள் என முப்பது வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தூய்மை பணியில் 19 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இன்றுக்குள் சென்னையில் உள்ள அனைத்து பட்டாசு கழிவுகள் அகற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளி அன்று 63 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.