ஊரடங்கு விதிகளை மீறியும் தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிவதால் மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாள்தோரும் காய்கறிகள் வாங்க சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மக்கள் வருகை புரிகின்றனர். மிகவும் நெருக்கமான பகுதியாக மார்க்கெட் உள்ளதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிக்கலுக்குரியதாக உள்ளது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருவருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல் துறை ஆணையர் மற்றும் பலர் கலந்தாலோசித்து வருகின்றனர். சமூக இடவெளியை கடைப்பிடிப்பதில் சிரமங்கள் உள்ள நிலையில் மக்களும் பலர் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிவதை குறைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோயம்பேட்டில் சில கடைகளை மட்டும் இயங்க அனுமதி அளிக்கவும், மீத கடைகளை மாதவரம் மற்று கேளம்பாக்கம் பகுதிகளுக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனால் வழக்கமான வியாபாரத்தில் சுணக்கம் ஏற்படலாம் என வியாபாரிகள் தயங்குவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.