செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விரைவில் 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை முதற்கட்டமாக 10 மணிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஏரி தண்ணீர் செல்லும் இடங்களான சிறுகளத்தூர், நந்தம்பாக்கம்,காவனுார் ,திருநீர்மலை , திருமுடிவாக்கம், குன்றத்தூர் , வழுதலம்பேடு, உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இன்னும் அதிக அளவு நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.