தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவிடம் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு அது தவறான பதிலை அளித்தது குறித்து நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான OpenAI தயாரித்து வெளியிட்ட ChatGPT தொழில்நுட்ப உலகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடிதங்கள் எழுதுதல், ஆவணங்கள் தயாரித்தல், கம்ப்யூட்டர் கோடிங் எழுதுதல் என காதல் கடிதம் வரை பலவற்றையும் எழுதி தருவதால் சாட் ஜிபிடியின் செயல்பாடு பலரை வியக்க வைத்துள்ளது. அதேசமயம் இதன் வளர்ச்சியால் பலர் பணி இழக்கும் அபாயம் உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
ஆங்கிலத்தில் திறமையாக செயல்படும் சாட்ஜிபிடி-யை சமீபத்தில் உலகத்தின் பல முக்கியமான மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தியுள்ளனர். ஆனால் ஆங்கிலம் அளவிற்கு பிற மொழிகளில் சாட் ஜிபிடியால் செயல்பட முடியாத நிலை உள்ளது. முக்கியமாக தமிழ் மொழியை சாட் ஜிபிடி இன்னும் முழுமையாக கையாள கற்கவில்லை.
சாட் ஜிபிடியிடம் ”தமிழக முதல்வர் யார்?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு விதமான பதிலை சொல்லியுள்ளது சாட் ஜிபிடி. ஆனால் அந்த பதில்கள் தவறாகவே இருந்துள்ளன. அதே கேள்வியை ஆங்கிலத்தில் கேட்டால் சரியாக பதிலளிக்கிறது. அதுபோல தமிழில் அது வழங்கும் கட்டுரைகள் நேர்த்தியானதாக இல்லாமல், புரியும் வகையில் இல்லாமலும் உள்ளது. மேலும் அக்டோபர் 2021ம் ஆண்டு வரையிலான தகவல்களை மட்டுமே சாட்ஜிபிடியால் வழங்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தொழில்நுட்ப ஆர்வலர்கள் பேசுகையில், மொழிகளின் திறனை புரிந்து கொள்வது, முக்கியமாக தமிழ் போன்ற அதிக எழுத்துக்கள், வார்த்தைகள் கொண்ட மொழியை புரிந்து கொள்வது சாட் ஜிபிடிக்கும் சிரமம்தான் என்றாலும், இது பீட்டா வெர்சன்தான் என்றும், இது மேலும் மேம்படுத்தப்படும்போது அனைத்து மொழிகளிலும் சரளமாக பதில்களை வழங்கும் என்றும் கூறுகின்றனர். அடுத்ததாக சாட்ஜிபிடியின் அப்டேட்டாக ஜிபிடி4 விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.