வாடகை கார் டிரைவரிடம் செல்போன் திருடி விட்டு தப்பிச்சென்ற வாலிபரை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடிக்க முயன்ற போது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
சென்னை போரூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜான்பால்(வயது 21) நேற்று வாடகை கார் டிரைவரிடம் செல்போனை திருடிக்கொண்டு தப்பிச்சென்றார். உடனே அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டபடியே தனது காரில், அந்த ஆட்டோவை விரட்டிச்சென்றுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மீனம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்–இன்ஸ்பெக்டர் வைரமூர்த்தி, போலீஸ்காரர் நாகூரான் மற்றும் பொதுமக்களும் தங்களின் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபரை பிடிக்க அவரது ஆட்டோவை விரட்டிச்சென்றனர்.
விமான நிலையம் அருகே பல்லாவரம் சந்தை சாலையில் சென்ற போது திடீரென ஆட்டோ நின்று விட்டது. ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய வாலிபரை பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த வாலிபர் தன்னிடம் இருந்த பிளேடை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டார். பின்னர் காவல் துறையினர் அவரை பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஜான்பாலின் ஆட்டோவில் 18 வயது பெண் ஒருவரும் இருந்துள்ளார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.