சென்னை அருகே அம்மா உணவகத்தில் திடீரென சீலிங் இடிந்து விழுந்ததால் ஒரு பெண் படுகாயம் அடைந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் நகராட்சி சார்பில் பம்மல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இன்று காலை திடீரென சீலிங் விழுந்தது. இதனால் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த பெண், அம்மா உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்ததாகவும், இன்னும் சில பெண்கள் உள்ளே உணவுகளை தயார் செய்து கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.
அப்போது உணவகத்தின் மேல் உள்ள சீலிங் திடீரென பயங்கர சட்டத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது துப்புரவு செய்து கொண்டிருந்த உமா என்ற பெண் படுகாயம் அடைந்ததை அடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அதிகாலை நடந்ததால் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால், மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அம்மா உணவகத்தை திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சரிவர பராமரிக்கவில்லை என்றும் இதனால் தான் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதிமுக பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ தன்சிங் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், "அம்மா உணவகங்களை திமுக அரசு முடக்க வேண்டும் என்பதற்காகவே முறையான பராமரிப்பு பணிகள் செய்வதில்லை. அனைத்து அம்மா உணவகங்களும் மிகவும் பாழான கட்டிடம் போல் உள்ளது" என்று கூறியுள்ளார்.