Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.வின் மரணம் திட்டமிட்ட சதியா? - விசாரணையை துவக்குமா சிபிஐ?

ஜெ.வின் மரணம் திட்டமிட்ட சதியா? - விசாரணையை துவக்குமா சிபிஐ?
, செவ்வாய், 10 ஜனவரி 2017 (09:07 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.வின் மரணத்தில் சதி இருப்பதாக, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, மத்திய அரசிடம் கொடுத்த புகார் மனு சி.பி.ஐயின் நிர்வாக அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்.22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், டிசம்பர் 5ம் தேதி அவர் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது முதல் ஜெ.வின் மரணத்தில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் எழுவதை தடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதுபற்றி விளக்கம் அளிக்காமல் இதுவரை மௌனமாக இருந்து வருகிறார். அவரின் மௌனம், பொது மக்கள் மற்றும் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் ஜெ.வின் மரணம் குறித்த சந்தேகத்தை  அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
 
இந்நிலையில், ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அதில் ஒரு வழக்கில், ஜெ.வின் மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி ஒருவரே கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும். ஜெ.வின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
மறுபக்கம், ஜெ.வின் மரணம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா,  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புகார் மனு அளித்தார். அதேபோல், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து அவர் விவாதித்தார். 
 
இந்நிலையில்தான், சி.பி.ஐயின் நிர்வாக அமைப்பான பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு சசிகலா புஷ்பாவின் மனுவை உள்துறை அமைச்சகம் அனுப்பியிருக்கிறது. ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருந்தால், அதை சிபிஐ விசாரிக்கும் எனத் தெரிகிறது. மேலும், சசிகலா புஷ்பா சில முக்கிய ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளதாகவும், சி.பி.ஐ விசாரணையை தொடங்கும் போது அவர் அதை ஒப்படைப்பார் எனவும் தெரிகிறது. 
 
2011ம் ஆண்டு, ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக கூறி சசிகலா உள்ளிட்ட அவரின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கியதோடு, போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. நடராஜன், திவாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஆனால், 3 மாதங்களுக்கு பின் சசிகலா மட்டும் கார்டனில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவரின் உறவினர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என அறிவித்தார் ஜெயலலிதா. 
 
அதன் பின்னர் கார்டனில் இருந்து கொண்டே சதி  திட்டங்கள் தீட்டப்பட்டு, இறுதி கட்டமாக, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெ.சேர்க்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டார். ஏனெனில், எந்த சூழ்நிலையில் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என சசிகலா இதுவரை வாய் திறந்து பேசவில்லை. அதேபோல், அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சசிகலா திட்டவட்டமாக நிராகரித்தார். ஜெ.வை காப்பாற்ற முடியாமல் போனதற்கு சில மறைமுக காரணிகள் இருந்ததாக அப்பல்லோ அறிக்கை கூறியது. ஆனால், அதுபற்றி விளக்கமாக அப்பல்லோ ரெட்டி எதுவும் கூறவில்லை என மத்திய அரசிடம் தெளிவாக விளக்கியுள்ளாராம் சசிகலா புஷ்பா என செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், சசிகலாவிற்கு எதிராக பல்வேறு தகவல்களையும் அவர் திரட்டியுள்ளாராம்.
 
எனவே ஜெ.வின் மரணத்தை சிபிஐ விசாரிக்கும் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுவெளியில் பெண்களை விரட்டி விரட்டி முத்தமிட்டு வாலிபருக்கு சிக்கல்