ஆதிக்கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் பிற மதத்தினரை அனுமதிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் திருவட்டாறில் உள்ள பிரபல ஆதிக்கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் அமைச்சர் மனோ.தங்கராஜ் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறைக்கு கோவில் பூஜை விவகாரங்களில் தலையிட அனுமதி இல்லையென்றும், கோவில் கும்பாபிஷேக விழாக்களில் அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்வதால் சாமி மற்றும் பூஜை மீதான கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் கும்பாபிஷேகம் அன்று பிற மதத்தவரை அனுமதிக்கக் கூடாது என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை “வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட பிற மத தலங்களுக்கு இந்துக்களும் சென்று வருகின்றனர். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த யேசுதாஸ் ஹரிவராசனம் பாடி உள்ளார். பல இந்துக்களும் அவருக்கு ரசிகனாக உள்ளனர். இந்த விஷயத்தில் மனுதாரர் குறுகிய மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது.
கோவிலுக்கு பக்தியுடன் வருபவர்களை அடையாள அட்டை வைத்து கண்காணிப்பது இயலாத காரியம். கும்பாபிஷேகம் வரும் அரசியல்வாதிகள் அரசியல் பேச மாட்டார்கள்” என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.