Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. ஊருக்கே நீ மகுடம்! – கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை!

Senthil Velan
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (11:46 IST)
சிவந்த கண்களும் மிடுக்கானத் தோற்றமும் கம்பீரம் குறையாத வள்ளல் குணமும் கொண்டவர். தமிழ்நாட்டில் இவரது பெயரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.  மீண்டும் எழுந்து வா தலைவா என ரசிகர்களும் தொண்டர்களும்  கண்ணீருடன் அழைக்கும் ஒரே தலைவர் மறைந்த நமது கேப்டன் விஜயகாந்த். சாமானியர்களின் நெஞ்சத்தில் என்றென்றும் குடியிருக்கும் கேப்டனின் பிறந்த நாளை இன்று தமிழகமே கொண்டாடி வருகிறது. திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும் அதிரடி காட்டிய கேப்டனின் வரலாற்றை தற்போது விரிவாக பார்க்கலாம்.


 
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.   மதுரை திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு பிறந்த விஜயகாந்த், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தார். சினிமாவில் ஏற்பட்ட காதல், அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. 

சென்னை தியாகராய நகரில் தங்கி படவாய்ப்பு தேடிய அவர், ஏறி இறங்காத இடம் இல்லை. அனைத்து தயாரிப்பாளர்களின் வாசல்களிலும் ஏறி இறங்கியவர் தொடக்கத்தில் ஒதுக்கப்பட்டார். அவரது கருப்பு நிறமும், உருவமுமே சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க பெரும் தடையாக இருந்தது. ஆனாலும், மனம் தளரவில்லை.   அத்தனை அவமானங்கள், நிராகரிப்புகளையும் தாண்டி இனிக்கும் இளமை படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.  

1979 ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் கிடைத்த முதல் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.  விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். அதே ஆண்டில் வெளியான ’அகல் விளக்கு’ என்ற திரைப்படத்திலும் விஜயகாந்த் நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்கள் மூலம் சற்று அடையாளப்பட்டாலும் அவருக்கான சினிமா வாய்ப்பு என்பது கடினமாகவே இருந்தது.

சிவப்பாய் சாக்லேட் பாய் இமேஜில் ஹீரோக்கள் வலம் வந்து கொண்டிருக்கும்போது கருப்பாக நம் அண்டை வீட்டு ஆள் மாதிரி வந்து சேர்ந்தார் விஜயகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக அவரை கொண்டாட தொடங்கினர் தமிழ்நாட்டு மக்கள். புரட்சி இயக்குனர் என்று ரசிகர்களால் அறியப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படம் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு பிறகு விஜயகாந்தின் திரைபயணம் மின்னல் வேகத்தில் பயணிக்க தொடங்கியது. 11 ஆண்டுகளில் 92 திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்தார். அதில் சிவப்பு மல்லி, நெஞ்சில் துணிவிருந்தால், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே. வானத்தைப்போல என பல திரைப்படங்கள் விஜயகாந்தை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.

குறிப்பிட்ட ஒரு ஜேனர் திரைப்படங்களில் நடிக்காமல், குடும்ப கதை, ஆக்சன், கிராமத்து கதை களம், சென்டிமென்ட் என அனைத்து வகையிலும் கதைகளை தேர்வு செய்து வெற்றிக் கொடி நாட்டினார். தன்னுடைய திரை பயணத்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மிகவும் உதவி செய்ததால் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் விஜயகாந்த். இதன் காரணமாக எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜயை நாயகன் ஆக்க முயற்சி செய்தபோது,  தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதே விஜய் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் கேமியோ எண்டரி கொடுத்தார். இதனால்தான், நட்பு, மரியாதை, நன்றி ஆகியவற்றின் மொத்த உருவம்தான் விஜயகாந்த் என்று தற்போதும் உச்சிமுகர்ந்து பேசுகிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

தனது அடுத்தடுத்த படங்களில் சமூக சீர்த்திருத்தங்களை பேசிய விஜயகாந்த், திரைத்துறையிலும் ஆகப்பெரும் திருத்தங்களை மேற்கொண்டார். படத்தின் நாயகன் என்ன சாப்பிடுகிறாரோ, அதையே படத்தில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்வரை சாப்பிட வேண்டும் என்ற முறையை கொண்டுவந்தார். காலையில் தஞ்சாவூர், இரவு சேலம், மறுநாள் காலை வேறு இடத்தில் சூட்டிங் என்று நடித்தவர். ஒரே வருடத்தில் மட்டும் 18 படங்களில் நடித்து சாதித்திருந்தார்.

தனது படங்களில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திய அவர், பேரிடர் காலங்களில் பெரிய அளவில் நிவாரண நிதிகொடுத்து உதவினார். நடிகராக மட்டுமில்லாமல், நடிகர் சங்க தலைவராகவும் இருந்தார் விஜயகாந்த்.  


 
அவர் தலைவராக பதவியில் இருந்த காலம் தான் நடிகர் சங்கத்தின் பொற்காலம் என சிலாகிக்கின்றனர் திரைத்துறையினர். 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி முழுவதுமாக அடைத்தார்.

மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். அதுமட்டுமல்லாது, 2002 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, நடிகர்களை ஒன்றிணைத்து நெய்வேலியில்
போராட்டம்  நடத்தினார்.

ஈழத்தமிழர்கள் மீதும் பிரபாகரன் மீதும் தனிப்பற்றுக் கொண்டவர் விஜயகாந்த். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறார். தனது 100வது படத்திற்கு `கேப்டன் பிரபாகரன்’ எனப் பெயர் வைத்து நடித்தது மட்டுமல்லாது, தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்து, பிரபாகரன் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த் ரசிகர்களாலும், சினிமாதுறையினராலும் ’கேப்டன்’ என அழைக்கப்பட்டார். 

ஆக்சன் படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்து வந்த நிலையில் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ’சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில் விஜயகாந்தின் நடிப்பும் படத்தின் காமெடியும் பெரும் வெற்றியடைந்தன. இதேப்போல் சத்ரியன், ஊமை விழிகள், சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு ஆகிய திரைப்படங்களை சொல்லியாக வேண்டும். இந்த படங்களில் விஜயகாந்தின் சண்டை காட்சிகள் டிரேட் மார்க்காக கொண்டாடப்பட்டன.

விஜயகாந்த் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவர் நினைத்துக் கொண்டாட கூடிய திரைப்படங்களில் ஒன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா இந்த திரைப்படத்தில் தன்னுடைய முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்திருந்தார். இப்படமே விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கும் தொடக்க புள்ளியாக அமைந்தது.

விஜயகாந்த் நடிகராக மட்டுமில்லாமல் தன்னுடைய நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தூருடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்துள்ளார். விருதகிரி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார்.  எம்.ஜி.ஆர். ரசிகரான விஜயகாந்த் பின்னாளில் அவரது பாணியிலேயே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதற்கான அடித்தளமிட்டார். அவரது அரசியல் வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்றால், அது 1979ல் உருவாக்கப்பட்ட தென்னிந்திய விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்தான். தொடக்கத்தில் ‘தமிழன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா’ என்று முழங்கியது ரசிகர் மன்ற படை..


 
இலவச வேட்டி சேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள், தையல் மிஷன்கள், மாணவர்களுக்கு கணிணி பயிற்சிகள், இலவச திருமணங்கள் என்று 80களில் இருந்தே கொடை வள்ளலாக மாறினார்.


இவரின் நகர்வுகளைப் புரிந்து கொண்டு பல தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் அதிகமானது.   பின்பு ஊர் ஊராகச் சென்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். சென்ற இடங்கள் எல்லாம் விஜயகாந்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.  விஜயகாந்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.     

2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ல் தன் சொந்த ஊரான மதுரையில் ’தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் திரண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியின் பெயர், நோக்கம், கொள்கைகள் ஆகியவற்றை அறிவித்தார். இதுவரை ஆட்சி செய்து கொண்டிருந்த இரு திராவிட கட்சிகளுக்கு மாற்று, ஊழல் ஒழிப்பு இதுதான் முதன்மைக் கொள்கைகள்.    ஊழலை ஒழிக்கக் களத்துக்கு வந்த புரட்சி நாயகனாகத்தான் அப்போது  பார்க்கப்பட்டார் விஜயகாந்த்.

தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இருந்தபோதே, துணிச்சலாக அரசியலில் களமிறங்கி இருபெரும் கட்சிகளையும் ஆட்டம் காணவைத்தார் விஜயகாந்த்.

2006 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 232 தொகுதியில் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக.   அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்துப் போட்டியிட்ட மற்ற யாரும் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால், அந்த தேர்தலில் தேமுதிக 8.45 சதவிகித வாக்குகள் பெற்றது. இதன் மூலம் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் அதுவரை வட மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருந்த பா.ம.கவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜயகாந்த்.

மேலும் தி.மு.கவின் மெகா வெற்றியைச் சிதைத்ததும் அ.தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாகவும் தே.மு.தி.கவின் வாக்குகளே காரணம் என அப்போது சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 100 தொகுதிகளுக்கும் மேலாக, வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தே.மு.தி.கவின் வாக்குகளே இருந்தன.


 
வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விருத்தாசலம் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் கோவிந்தசாமியைத் தோற்கடித்து முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் விஜயகாந்த். ஜானகி அம்மையார் பரிசளித்த எம்.ஜி.ஆரின் பிரசார வாகனத்தையே தன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார் விஜயகாந்த்.
மேலும் மேடைப்பேச்சில் வித்தியாசமாக பேசும் விஜயகாந்த் ஆளுமைமிக்க பேச்சாளராக விளங்கினார். ஆவேசமாக பாயிண்டுகளை அவர் எடுத்தும் வைக்கும் விதம் சினிமா வசனம் போலவே சிறப்பாக இருக்கும். இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஒவ்வொரு கூட்டத்திலும் தனது கம்பீரக் குரலால் மக்களே என்று அழைக்கும் அந்த கர்ஜனையை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். கறுப்பு எம்ஜியார் என அதிமுகவை அலறச் செய்தார் விஜயகாந்த். திமுகவை பொருட்டாக மதிக்காது அரசியல் களத்தில் சுழன்றடித்தார்.

நாளுக்கு நாள் மக்களிடையே கேப்டனுக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து ஜெயலலிதாவும் கருணாநிதியும் மிரண்டு போனார்கள். தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் அனைத்து தகுதிகளும் கேப்டனுக்கு இருந்தது. இதனால் கேப்டனுடன் கூட்டணி வைக்க இரண்டு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டன.

தொடர்ந்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வலைவிரிக்க விஜயகாந்த் பிடிகொடுக்கவில்லை. மீண்டும் தனித்தே தேர்தலை சந்தித்தார்.  39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக எல்லோரையும் பிரமிப்பாகப் பார்க்க வைத்தது. பெரும்பாலான தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் 50,000-த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

அந்தத் தேர்தலில் 30,73,479 வாக்குகளை விஜயகாந்த் பெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 10.45 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார் விஜயகாந்த்.  

இவ்வாறு தேமுதிகவின் செல்வாக்கு ஒவ்வொரு தேர்தலாக அதிகரித்து வருவதை திமுகவும், அதிமுகவும் கவனித்து வந்தன. இதையடுத்து 2011 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி கொண்டிருந்தது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று திராவிட கட்சிகள் முயற்சித்தன.


 
மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி எனப் பேசிவந்த விஜயகாந்த், சேலத்தில் நடந்த மக்கள் உரிமை மாநாட்டில் கூட்டணிக்குச் செல்வது குறித்து தொண்டர்களிடம் கருத்துக் கேட்டார். அப்போது தொண்டர்கள் அனைவரும் கூட்டணி செல்வதையே விரும்பினர். திமுக மீது இருந்த அதிருப்தி காரணமாக  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி செல்வதாக அறிவித்தார் விஜயகாந்த்.

கடந்த முறை போல, இந்தமுறையும் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனக் கண்ணும் கருத்துமாக இருந்த ஜெயலலிதாவும் விஜயகாந்தோடு கூட்டணி வைத்தார். பெரிய பெரிய அரசியல் கட்சிகளை காக்க வைத்தவர் ஜெயலலிதா. ஆனால் விஜயகாந்திற்காக காத்திருந்தார் என்ற பேச்சு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

2011 சட்டமன்ற  தேர்தலில் தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார் விஜயகாந்த். இருப்பினும் தேமுதிகவின் வாக்கு சதவீதம்  7.9 ஆக குறைந்தது. அந்த தேர்தலில் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளினார் விஜயகாந்த்.  இது கருணாநிதிக்கு பேரடியாக விழுந்தது. 2011ல் தேமுதிக கண்ட அரசியல் எழுச்சியை தமிழகத்தில் உள்ள கட்சிகளால் ஒருபோதும் மறக்க முடியாது.

தேமுதிகவில் அதிக அளவிலான இளைஞர்கள் சட்டப்பேரவைக்கு முதன்முறையாகச் சென்றனர். சைக்கிள் கடை தொழிலாளி ஒருவரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கினார் விஜயகாந்த்.  எதிர்க்கட்சி வரிசையில் திமுகவை விடப் பெரிய கட்சியாக அமர்ந்தது தேமுதிக.

கூட்டணியில் இருந்த போதும் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தினார் ஜெயலலிதா. இது குறித்து விஜயகாந்த் கேள்வி எழுப்பவே, போர்க்களமாக மாறியது சட்டமன்றம். அதிமுகவினருக்கு எதிராக விஜயகாந்த் நாக்கை துறுத்தி பேசியது, திரையில் மட்டுமல்ல தரையிலும் ஹீரோவாக அடையாளம் காணப்பட்டார்.

தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, மதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டார் விஜயகாந்த். அந்த தேர்தலில் தேமுதிக வாக்கு சதவீதம் சரிந்தது. இருப்பினும் கேப்டனின் செல்வாக்கு குறையவில்லை. அதன் பின் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கேப்டன் விஜயகாந்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தது திமுக.

திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது என்றும் எப்போது விழும் என்பதை கூற முடியாது என்றும் கருணாநிதி கூறியிருந்தார்.

ஆனால் திமுக அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியைக் கட்டமைத்து மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆகியோரால் அடுத்த முதல்வராக முன்மொழியப்பட்டார்.  ஆனால் அந்தக் கூட்டணி, தேர்தலில் படுதோல்வி அடைந்தது.  அவரது உடல்நிலை அரசியல் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. கம்பீரமான பேச்சால், அரசியலில் அதிமுக திமுகவை ஆட்டம் காண வைத்த விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது. அவரால் பேச முடியாமல் போனதே தேமுதிகவின் சருக்களுக்கு முக்கிய காரணம்.

 உடல் நிலை காரணமாக முழுநேர அரசியலில் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் விஜயகாந்த்.

இதன் காரணமாக பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் தேமுதிகவின் முகங்களாக மாறினர். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 2 சதவீதம் என்கிற அளவுக்குக் குறைந்தது. அடுத்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேமுதிகவின் வாக்கு சதவீதம் மேலும் சரிந்தது.

பல வீழ்ச்சிகள், சூழ்ச்சிகள் இருந்தாலும், விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக  தேமுதிகவுக்கு ஆதரவாக பலர் நின்றனர்.  உடல்நலக்குறைவால கடந்த சில ஆண்டுகளாக ஓய்வெடுத்து வந்த கேப்டன் விஜயகாந்த்,  தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இதுவே அவரது கடைசி பொதுக்கூட்டமாக அமைந்தது.


 
2023 டிசம்பர் 28ஆம் தேதி காலை தேமுதிக தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தியை கேட்டு தமிழகமே கதறி அழுதன. அவரது 71வது வயதில் தன்னோடு அழைத்துக்கொண்டுள்ளது இயற்கை. கேப்டனின் இல்லம் இல்லம் முன்பும், தேமுதிகவின் அலுவலகம் முன்பும் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டனர்.

மருத்துவமனையில் இருந்து கேப்டனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்காக பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் திரைபிரபலங்கள் பலரும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.  பின்னர் தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர்  கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தாலும், அவர்களின் கண்ணீராலும் நிரம்பின.

வழிநெடுகிலும் கேப்டனின் உடல் மீது பூக்களை வீசி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கேப்டனின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.  மாலை 6 மணிக்கு காவல் துறையினர் கேப்டனின் உடலுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். பின்னர், 72 குண்டுகள் வான் நோக்கி சுடப்பட்டு, வாத்தியங்கள் முழங்க கேப்டனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் உறவினர்கள் விஜயகாந்தின் உடலைச் சுற்றிவந்து இறுதிச் சடங்களை செய்தனர். குடும்ப வழக்கப்படியான சில சடங்குகளும் செய்யப்பட்டன.



7 மணியளவில் கேப்டனின் உடல் குழியில் இறக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக குழிக்குள் இறக்கப்பட்டபோது உறவுகளும், நண்பர்களும், தொண்டர்களும் விண்ணை பிளக்கும் அளவிற்கு கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. தேமுதிக தொண்டர்கள் இடிந்து போனார்கள். நமது தலைவரை ஒருமுறை உயிரோடு பார்க்க மாட்டோமா என கதறி அழுதனர். கேப்டனின் மறைவால் அன்று தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தன. வீட்டில் இருந்தபடியே கேப்டனின் இறுதி சடங்கை பார்த்த மக்களும் கதறி அழுதது யாராலும் மறக்க முடியாது.

தற்போது  கேப்டனை நல்லடக்கம் செய்த இடத்தை கோவிலாக மாற்றி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு வரும் மக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. உயிரோடு இருந்த போதும் மட்டுமன்றி இறந்த போதும் ஏழை எளிய மக்களின் பசியாற்றி வருகிறார் கேப்டன்.

கேப்டன் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு சார்பில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் வீழ்வதும் வீறுகொண்டு எழுவதும் புதிதல்ல. ஆனால், தனியொரு மனிதராக விஜயகாந்த் கட்சியை வளர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்து சாதனை படைத்தார்.

கேப்டன் தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் இனி தனிநபர் கட்சித்தொடங்கி அதேபோல் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. தமிழக திரையுலகிலும், அரசியலிலும் யதார்த்த மனிதர், உதவும் உள்ளம் கொண்டவர், ஆளுமைப்பண்பு மிக்க தலைவர் விஜயகாந்த் மட்டுமே.  கருணை.. தைரியம்.. துணிச்சல்.. நட்பு.. அன்பு என்று அனைத்திற்கும் உதாரணமாக திகழும் கேப்டன் விஜயகாந்த் சாமானியர்களின் நெஞ்சத்தில் என்றென்றும் மன்னன் என்பதில் சந்தேகமில்லை.  வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் யார்? அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments