Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய இந்தியாவைப் பிரசவிக்கப் போவதாக மார்தட்டும் மோடி இதனை செய்வாரா? - சீமான் கேள்வி

Advertiesment
புதிய இந்தியாவைப் பிரசவிக்கப் போவதாக மார்தட்டும் மோடி இதனை செய்வாரா? - சீமான் கேள்வி
, புதன், 15 மார்ச் 2017 (15:11 IST)
புதிய இந்தியாவைப் பிரசவிக்கப் போவதாக மார்தட்டும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அந்த இந்தியாவையாவது சாதிய, தீண்டாமைக் கொடுமைகளற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற நாடாகப் படைப்பாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடுக்கப்பட்ட சமூகத்தில், மிகவும் பின்தங்கிய குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த முத்துக்கிருஷ்ணன், தனது தன்னம்பிக்கையினாலும், மன உறுதியாலும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவராகச் சேருமளவுக்கு கல்வியிலே தழைத்தோங்கியிருக்கிறார்.

அத்தகைய பேராண்மையோடு திகழ்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுவது நம்பும்படியாக இல்லை. மாணவரின் தந்தையும் தன் மகன் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்குக் கோழை இல்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்திருப்பது இவ்விவகாரத்தில் நமக்குள்ள ஐயப்பாட்டினை சரியென மெய்ப்பிக்கிறது.

மேலும், மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக முத்துக்கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், ‘சமூகத்தின் விளிம்புநிலையிலிருந்து வருபவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் பேணப்படுவதில்லை’ என்று தெரிவித்திருப்பதும், ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு பயின்றபோது ரோகித் வெமுலாவை முத்துக்கிருஷ்ணன் அறிந்திருந்தார் என்பதும், ரோகித்தின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரிப் போராடினார் என்பதும் இம்மரணத்தில் கவனிக்கத்தக்கதாகும்.

ஏற்கெனவே, டெல்லி எய்ம்ஸ் கல்லூரி மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணன் மரணமடைந்தபோதும் இதேபோல முதலில் தற்கொலை என்றுதான் டெல்லி காவல்துறையினர் பதிவுசெய்தார்கள். பின்புதான், அது திட்டமிட்ட படுகொலை என்பது நிரூபணமானது. அந்தப் படுகொலை குறித்த குற்றவாளிகளையே இன்னும் கண்டறிந்து கைதுசெய்யாத நிலையில், தற்போது நிகழ்ந்திருக்கும் முத்துக்கிருஷ்ணனின் மரணமானது டெல்லியில் கல்வி கற்கும் தமிழக மாணவர்கள் குறித்து அச்சத்தை விளைவிக்கிறது. ஏற்கெனவே, இந்திய அளவில் கையெறி பந்து போட்டியில் பங்கேற்க டெல்லிக்குச் சென்ற தமிழக வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடே இந்தியப் பெருநாடு அணுகுவதை அறுதியிட்டுக் கூறுகிறது.

அடிமை இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகளுக்கிடையேயும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கிடையேயும் படித்துப் பட்டம் பெற்று மாமேதையாக அண்ணல் அம்பேத்கரால் திகழ முடிந்தது. ஆனால், இன்றைக்குச் சுதந்திர இந்தியாவில் ரோகித் வெமுலாவும், முத்துக்கிருஷ்ணனும் பட்டப்படிப்புக்குச் சென்றால் உயிரையே இழக்கிறார்கள் எனும் துர்பாக்கிய நிலையானது ஒட்டுமொத்த இந்திய மக்களும் வெட்கித் தலைகுனியக்கூடியதாகும். வேற்றுமையில் ஒற்றுமை, இந்திய இறையாண்மை எனப் பாடமெடுக்கும் இந்தியாவில், நாட்டின் கடைக்கோடியில் இருந்து தலைநகருக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவன் உயிரை இழப்பது தேசிய அவமானமாகும்.

புதிய இந்தியாவைப் பிரசவிக்கப் போவதாக மார்தட்டும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அந்த இந்தியாவையாவது சாதிய, தீண்டாமைக் கொடுமைகளற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற நாடாகப் படைப்பாரா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி. இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற பேரரறிஞராக இருக்கிற அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘பல்லாயிரம் சாதிகளாகப் பிளவுபட்டு நிற்கிற இந்தியக் குடிமக்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் வருவதே கடினமானது’ என்று உரைப்பதன் மூலம் அதற்கான அவசியத்தை நாம் உணர முடியும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாமின் வேண்டும் என்றால் 100 சீமைக் கருவேல மரங்கள் இலக்கு: நீதிபதி அதிரடி உத்தரவு!!