திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து கருணாநிதி எம்எல்ஏ-வாக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இதனால் தமிழகத்தில் விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத்தேர்தல் ஸ்டாலின் கருணாநிதி இல்லாமல் தனியாக சந்திக்கும் முதல் தேர்தல். எனவே, இந்த தேர்தல் ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
வரும் 14 ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என செய்திகள் வெளியானலும், திமுக தரப்பில் இது கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கூட்டப்படும் கூட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் என்ன முடிவுகள் இடுத்தாலும், இரண்டு தொகுதியிலும் கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனம்.
குறிப்பாக திருப்பரங்குன்றம் தேர்தலில் வெற்றி பெறுவதை விட, கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற நினைக்கிறது.
திருவாரூர் தொகுதியில் உதயநிதி தேர்தலில் நிறுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், ஸ்டாலின் கணக்குப்படி முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு இந்த தொகுதியில் வாய்ப்பளிக்க இருப்பதாக தெரிகிறது. கருணாநிதிக்கு நெருக்கமான ஒருவருக்கு சென்டிமென்டாக வாய்ப்பளிக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.