வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் போடப்பட்டதால் 100க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒரே நாளில் பழுதாகின.
வேலூர் மாவட்டம் பேராணம்பட்டு பகுதியில் லீலா விநோதன் எஜென்ஸிக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நேற்று இந்த பங்கில் பெட்ரோல் போட்ட 100 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பழுதடைந்தன.
இதனால் அவர்கள் அனைவரும் பங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலிஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பங்க் ஊழியர்கள் ’பெட்ரோல் டேங்கில் டீசல் தெரியாமல் ஏற்றி வந்ததால் ஏற்பட்ட குழப்பம் இது. அதற்கு பொறுப்பேற்று பழுதடைந்த வாகனங்களைத் தாங்களே சரிசெய்து தருகிறோம்’ என சொல்ல போலிஸார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேசி போராட்டத்தைக் கைவிட வைத்தனர்.
ஆனால் ஒரு சிலர் மட்டும் அவர்கள் சொல்வது பொய் என்றும் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதால்தான் வண்டிகள் பழுதானதாகவும் சொல்லி சென்றனர்.