Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக.,25 முதல் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் - முதல்வர் அறிவிப்பு

ஆக.,25 முதல் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும்  காலை உணவுத் திட்டம் - முதல்வர் அறிவிப்பு
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (17:51 IST)
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில்உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் சீர்மிகு இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்திட  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்  நாடு அரசு விடுத்துள்ள அறிக்கையில்,

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து, இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்” - என்று பாடினார் மகாகவி பாரதியார். மகாகவியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. சிறப்புவாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநில மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
இதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டு, தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (22-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27-7-2022 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி கடந்த 7-6-2023 அன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆணை முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட இருக்கும் இத்திட்டத்தினை வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ். பாட்டாளி மக்கள் கட்சி.

பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ''என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து போலீஸாரும் WhatsApp குரூப்பில் ....டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு