Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்! - தமிழ்க் காப்புக் கழகம் அறிக்கை!

Advertiesment
‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்! - தமிழ்க் காப்புக் கழகம் அறிக்கை!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (13:16 IST)
தமிழக உணர்விற்கு எதிரான ‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம் எனத் தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
 
தமிழ் மக்களுக்காக உருவாக்கப்படும் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது முறையான வேண்டுகோளே! ஆனால், திரைத் துறையினர் பலரும் இதற்கு மாறாகப் பிற மொழிகளில் தமிழ்ப் படங்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.
 
அடித்தளம், அரண்மனை, உ, உயிருக்கு உயிராக, எதிர்நீச்சல், களவாடிய பொழுதுகள், கோச்சடையான், கோவலனின் காதலி, சித்திரை திங்கள், சுற்றுலா, திருப்புகழ், நினைவில் நின்றவள், நெடுஞ்சாலை, நேர் எதிர், புலிவால், மாதவனும் மலர்விழியும்,  மாலை நேரப் பூக்கள், முறியடி, முன் அந்திச் சாரல், விடியல், விரட்டு, வெற்றி கொண்டான்  எனத் தமிழ்ப் பெயர் சூட்டுவோர் ஒருபுறம் பெருகி வருவது மகிழ்ச்சிக்குரியது. அதே நேரம் ‘மத கச ராசா’ போன்று தமிழை மறந்து பெயர் சூட்டுவோர்கள் மறுபுறம் இருக்கின்றனர். தமிழில் பெயரில்லாத திரைப்படங்களைத் தமிழக மக்கள் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும். இப்பட வரிசையில் ‘மெட்ராசு’ என வரும் திரைப்படம் தமிழக மக்களின் உணர்விற்கு எதிரானதாகும்.
 
1995 இல் ‘பம்பாய்’, ‘மும்பை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுபோல் தமிழில் ‘சென்னை’ என அழைக்கப்படும் மாநகரம் எல்லா மொழிகளிலும் ‘சென்னை’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தமிழக மக்கள் உணர்வுகளை மதித்து  ‘மெட்ராசு’ என அழைக்காமல் எல்லா மொழிகளிலுமே ‘சென்னை’ என அழைக்கப்பட வேண்டும் என 1996 இல்அறிவிக்கப்பட்டது. ‘கல்கத்தா’, ‘கொல்கத்தா’ என்றும்  ‘பாண்டிச்சேரி’, ‘புதுச்சேரி’  என்றும் ‘ஒரிசா’, ‘ஒடிசா’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றன.
 
webdunia


பிற மாநில மக்கள் தங்கள்  நகரப் பெயர்களை மாற்றப்பட்ட பெயர்களிலேயே அழைத்தும் குறித்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்னும் சிலர் ‘மெட்ராசு’ என்பதை மறக்காமல் உள்ளனர். இன்றைய தலைமுறையினர் அறியாத ‘மெட்ராசு’ என்னும் பெயரைத் திணிக்கவும் உள்ளத்தில் பதிக்கவும் சதி செய்வதுபோல் திரைப்படம் ஒன்றிற்கு 'மெட்ராசு' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக மக்கள் உணர்வைப் புறக்கணிக்கும் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
உரிய திரைப்பட அமைப்பினர் தங்கள்  பெயரைத் தமிழில் சென்னை என்று குறிப்பிட வேண்டுகின்றோம். படம் முடிவுற்ற நிலையிலும் இயக்குநர் இராசு மதுரவன் நம் வேண்டுகோளை ஏற்று, ‘மைக்செட்பாண்டி’ என்னும் படத்தின் பெயரைப்  ‘பாண்டி ஒலி பெருக்கி நிலையம்’ என மாற்றினார். எனவே மனம் இருந்தால் வழியுண்டு. அவ்வாறில்லாமல் ‘மெட்ராசு’ என்னும் பெயரிலேயே இப்படம் வெளிவருமானால் இப்படத்தை அடியோடு புறக்கணிக்குமாறு தமிழக மக்களை வேண்டுகின்றோம்.
 
தமிழ்ப் பெயரில்லாத படங்களுக்கு எச்சலுகையும் விருதும் அளிக்க வேண்டா எனத்  தமிழக அரசையும் வேண்டுகின்றோம்.
 
இவ்வாறு தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil