ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டலை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களே அனுப்பி உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அவல்பூந்துறை செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை 2000க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தனம் வழக்கம் போல் பள்ளி வகுப்புகள் தொடங்கிய நிலையில் திடீரென மின்னஞ்சலில் காலை 10.30 மணிக்கு பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடனடியாக மாணவ மாணவிகள் அனைவரையும் திறந்தவெளி மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.
இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அனைத்து வகுப்புகளிலும் சோதனை செய்தனர். மாலை வரை முழுமையாக சோதனையை நடத்திய நிலையில் மோப்பநாய் பிரிவினரும் வந்து பள்ளிக்கூடத்தில் சோதனை செய்தனர்.
இதனை அடுத்து சந்தேகப்படும்படி எந்த பொருளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து புரளி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் மெயில் வந்த ஐபி முகவரியை தேடிய போது இரண்டு மாணவர்கள் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அந்த மாணவர்களும் ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் அறிவுரை கூறினர். மீண்டும் இதுபோல் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.