தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள அழகம்மன் கோவிலில் கடந்த 26ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அங்கு சென்ற சிலர், அருகேயுள்ள மணப்பாடு கடற்கரைக்கு சென்று, படகு சவாரி செய்ய விரும்பினர்.
இதற்காக ஒரு மீன்பிடி விசைப்படகில் 20 பேர் ஏறி சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 1 கி.மீ தூரம் சென்ற போது, திடீரெனெ எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு தடுமாறி கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழிந்து தத்தளித்தனர். இது கேள்விப்பட்டு, கடற்கரையிலிருந்து சிலர் படகில் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 19 பேரை மீட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
அதில் சிகிச்சை பலன்றி ஏற்கனவே 9 பேர் இறந்துவிட்டனர். மற்ற அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
அளவுக்கு அதிகமானோர் அந்த படகில் ஏறியதும், அனைவரும் ஒரே பகுதியில் நின்று கொண்டிருந்ததாலும், திடீரென எழுந்த ராட்சத அலை காரணமாக படகின் சுமை ஒரு பக்கமாக அதிகரித்து கவிழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.