தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த விவகாரம், பாஜக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெ.வின் மரணம் அடைந்த உடனேயே ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியே சசிகலாவின் விருப்பமாக இருந்தது. ஆனால், மத்திய அரசின் விருப்பம் ஓ.பி.எஸ்-ஆக இருந்ததால், மத்திய அமைச்சர் வெங்கயநாயுடு, சசிகலாவை சமரசம் செய்து ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக அமர செய்தார்.
அதன்பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எனவே, ஒரு தலைமையின் கீழே ஆட்சி மற்றும் கட்சி ஆகியவை இருக்க வேண்டும். ஆகவே, சசிகலாவே முதல்வராக அமர வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக விசுவாசிகள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கிடையில், எல்லோரிடமும் அனுசரித்து கடந்த 2 மாதமாக ஆட்சியை அமைதியாக நடத்தி வந்தார் ஓ.பி.எஸ். பாஜக அரசும் அவருக்கு தனது ஆதரவை அளித்து வந்தது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, ஓ.பி.எஸ் டெல்லி சென்ற போது, பிரதமர் மோடி அவரை சந்தித்து பேசினார். ஆனால், சசிகலா சார்பில் டெல்லிக்கு அனுப்பப்பட்ட தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களை மோடி சந்திக்கவில்லை. இது சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அடுத்தடுத்த நடந்த விவகாரங்களில், தமிழக முதல்வர் பதவியில் சசிகலா அமர்வதில் பாஜக அரசுக்கு உடன்பாடு இல்லை என்பதை கார்டன் வட்டாரங்களும் புரிந்து கொண்டன. எனவே, தங்கள் பலத்தை காட்ட, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரமாக அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் கூட்டப்பட்டு, அதில் சசிகலா சட்டமன்ற பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவே அடுத்த முதல்வர் என அறிவித்ததோடு, தன்னுடைய ராஜினாமாவையும் ஆளுநருக்கு அனுப்பினார் ஓ.பி.எஸ்.
இந்நிலையில், தன்னுடைய முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் ராஜினாமா செய்ததை, பாஜக மேலிடம் விரும்பவில்லை. ஏனெனில், சொத்துக்குவிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள சசிகலாவை, முதல்வராக்கினால், தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என பாஜக கருதுவதாக தெரிகிறது.
மேலும், வருகிற 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் முடிவில் மோடி இருக்கிறார். அந்த நேரத்தில் கூட்டணி பற்றி பேச ஓ.பி.எஸ் பொருத்தமாக இருப்பார் என நினைத்துதான், ஓ.பி.எஸ்-ஸின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்தார் மோடி. ஆனால், திடீரென அவர் ராஜினாமா செய்து விட்டதால், இனி அவரை நம்பி பலனில்லை என்ற முடிவுக்கு பாஜக மேலிடம் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே, டெல்லி சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர், சென்னை திரும்பாமல், மும்பைக்கு சென்று விட்டார். அதனாலேயே சசிகலாவின் பதவி பிரமாண நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான சூழ்நிலையில் பயணிக்கிறது தமிழக அரசியல்....