கவிஞர் வைரமுத்து, சென்னை கம்பன் விழாவில் இந்து கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஆழ்வார் ஆய்வு மையத்தின் சார்பில், கவிஞர் வைரமுத்துவுக்கு கம்பன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், "திகைத்தனை போலும் செய்கை" என்ற கம்பரின் வரிகளை மேற்கோள் காட்டி, "திகைத்தல் என்றால் புத்திசுவாதீனம் அற்றவர் என்று பொருள். எனவே, புத்திசுவாதீனம் இல்லாமல் வாலியை ராமர் கொன்றுவிட்டார். இந்திய தண்டனை சட்டம் 84-ன்படி, புத்திசுவாதீனம் அற்றவர் செய்யும் குற்றத்திற்கு தண்டனை இல்லை. அதன் மூலம், ராமர் என்ற குற்றவாளியை காப்பாற்ற கம்பர் முயன்றிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
வைரமுத்துவின் இந்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஸ்வத்தாமன், "திகைத்தல் என்ற சொல்லுக்கு 'புத்திசுவாதீனம் அற்றவர்' என்ற பொருள் இல்லை. அதன் உண்மையான பொருள் 'வியப்படைதல்' அல்லது 'மயங்குதல்' ஆகும். ராமரை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வைரமுத்து அவதூறாக பேசியுள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், "திகைத்தல் என்ற சொல்லுக்குக் கூட பொருள் தெரியாதவரை 'கவிப்பேரரசு' என்று அழைப்பது திகைப்புக்குரியது. எனவே, ராமரை திட்டமிட்டு விமர்சித்த வைரமுத்து, தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றும் அஸ்வத்தாமன் வலியுறுத்தினார்.