தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானதை அடுத்து இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர விரும்பினால் அவர்களுக்கான பதிவு குறித்த தகவல்களை சமீபத்தில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பி.ஈ மற்றும் பிடெக் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். முதலாம் ஆண்டு சேர்க்கை போலவே இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையும் ஆன்லைன் மூலம் இணையதளம் வழியே நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ’தமிழகத்தில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும். இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறும். எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரிகளிலும் நாளை முதல் அதாவது ஜூலை 20ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது