கரூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பெண் அரசு அதிகாரி அந்த பதற்றத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துள்ளார்.
கரூர் மாவட்டம், கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுயதொழில் செய்து வரும் இளைஞர் ரமேஷ். இவர் வீடுகட்டுவதற்காக தனது வீட்டுமனையை வரைமுறைப் படுத்தும் பொருட்டு அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியிடம் விண்ணப்பித்துள்ளார். அவரைப் பலமுறை இழுத்தடித்த ஜெயந்திராணி அந்த பணியை செய்து முடிப்பதற்கு 34000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியான ரமேஷ், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம், இதுபற்றி புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் கூறிய அறிவுரையின் படி ஜெயந்திராணியிடம் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது அங்கே மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயந்திராணியை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதால் பதற்றமடைந்த ஜெயந்திராணி ‘தன்னை மன்னித்துவிடுமாறும், இனிமேல் லஞ்சம் வாங்கமாட்டேன் எனவும் கெஞ்சியுள்ளார். போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.