வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் தவறான உறவு
புதுக்கோட்டை அருகே வங்கி ஒன்றில் கேஷியராக பணிபுரியும் ஒருவர் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் மூலம் வலையில் வீழ்த்தி அவர்களுடன் தவறான உறவில் இருந்ததை அவரது மனைவியே போலீசுக்கு காட்டிக் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கேஷியராக இருப்பவர் ஜெயகுமார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர் தனது தனி அறையில் 15 செல்போன்களில் அடுத்தடுத்து பல பெண்களுடன் வாட்ஸ் அப்பில் உரையாடிக் கொண்டு இருந்ததை அவரது மனைவி தற்செயலாக பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவர் இல்லாதபோது அந்த செல்போன்களை அவர் ஆய்வு செய்தபோது அதில் அவருக்கு பல பெண்களுடன் தவறான உறவு இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த உரையாடல்கள் புகைப்படங்கள் அந்த உரையாடலில் ஈடுபட்டு இருந்த பெண்களின் வங்கி பாஸ்புக் ஆகியவைகளை பார்த்து தனது கணவர் வேலை செய்யும் வங்கியின் வாடிக்கையாளர்கள் தான் அவர்கள் என்பதைக் கண்டுகொண்டார்
இதுகுறித்து கணவரிடம் கேட்டதற்கு கணவரும் அவரது அம்மாவும் மனைவியை திட்டியதாகவும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் மிரட்டலை பொருட்படுத்தாது ஜெயக்குமாரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமின்றி செல்போன்களில் உள்ள ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைத்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஜெயக்குமார் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.