கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான 2 காவலர்கள் ஜாமீன் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தந்தை மகன் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முருகன் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்த முருகன் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தயார் செய்த புகாரில் கையெழுத்திட்டதை தவிர வேறு எந்த தவறையும் தான் செய்யவில்லை என தலைமை காவலர் முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் கணினி ஆப்பரேட்டராக பணியாற்றிய நிலையில், வேறு எந்த செயலிலும் ஈடுபடவில்லை என தாமஸ் பிரான்சிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது