சீனாவில் கடந்த அக்டோபர் 22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டில் பங்கேற்று பதக்கங்களை குவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மொத்தம் ரூ.3.82 கோடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று வழங்கப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான கழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில், சீனாவில் கடந்த அக்டோபர் 22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டில் 2022-ல் பங்கேற்று பதக்கங்களை குவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மாற்றுத்திறனாளி தம்பி - தங்கைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக (High Cash Incentive) மொத்தம் ரூ.3.82 கோடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று வழங்கினோம்.
மேலும், இந்தப்போட்டியில் பங்கேற்று திரும்பியுள்ள 11 வீரர் - வீராங்கனையருக்கு, அவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.22 லட்சத்துக்கான காசோலையை வழங்கி வாழ்த்தினோம். நம் வீரர்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!'' என்று தெரிவித்துள்ளார்.