Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம். வீரப்பனின் புகழ் நிலைத்திருக்கும்..! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

Mk Stalin

Senthil Velan

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (17:37 IST)
திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் புகழும் நிலைத்திருக்கும் என்று இரங்கல் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
 
அவரது 98ஆவது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி  நேரில் அவரது இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு  வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.
 
ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முத்தமிழறிஞர் கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.
 
பின்னாளில், எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.
 
எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன்,  அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்திற்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார். அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார்.
 
அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.
 
திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களது மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் புகழும் நிலைத்திருக்கும் என்று  முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியர்கள் விடுவிப்பு